
கார்த்திக் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அமரன்’. இதில் கார்த்திக் ஜோடியாக பானுப்ரியா நடித்திருந்தார். மேலும் சில்க் ஸ்மிதா, ராதாரவி, விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் கார்த்திக் தாதா கேரக்டரில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை ராஜேஷ்வர் இயக்கியிருந்தார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் கார்த்திக், இயக்குனர் ராஜேஷ்வர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் இயக்குனர் ராஜேஷ்வர் கூறும்போது, என் மனதில் அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருந்தது. அதேபோல் கார்த்திக் மனதிலும் இருந்தது. அதற்கான நேரம் சரியாக அமையாமல் இருந்தது. ஆனால், இதற்கான வீரியம் மட்டும் குறையவே இல்லை. அதன் முடிவுதான் இன்று இப்படத்தை தொடங்கி இருக்கிறோம். அமரன் அப்போது வெளியானபோது பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டது. அதுபோல் இப்போதும் இரட்டிப்பு பிரம்மாண்டத்தோடு லண்டன், இத்தாலி, மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் படமாக்கவுள்ளோம்.

அமரன் முதல் பாகத்தில் கார்த்திக் பாடிய ‘வெத்தல போட்ட சோக்குல’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது. அதுபோல் இந்த படத்திலும் அவரை ஒரு பாடல் அல்ல, இரண்டு பாடல்களை பாடவைக்க முயற்சி செய்கிறோம். ஆனால், இந்த பாடல் கானா பாடல் போல் இல்லாமல் தற்போதைய டிரண்டுக்கு ஏற்றாற்போல் புதுவிதமான பாடலாக இருக்கும். இப்படத்திற்காக கார்த்திக் தன் உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றவுள்ளார். தற்போது இப்படத்தின் கதாநாயகி தேடல் நடந்து வருகிறது. இதில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர் வெளிநாட்டினராக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று மாதத்தில் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் மார்ச் அல்லது எப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இப்படத்திற்கு கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். வைரமுத்து வரிகளுக்கு கிரிநாத் இசையமைக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment