நான் மாறிவிட்டேன் - நவரச நாயகன் கார்த்திக்
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ ஹீரோக்கள் வெற்றி வெளிச்சத்தில் மின்னியிருக்கிறார்கள். அவர்களில் பலர் இன்று இருக்குமிடம் தெரியவில்லை. அவர்களை திரையுலகம் மட்டுமல்ல, ரசிகர்களும் மறந்து போய்விட்டார்கள். மறுபடி அவர்களை ஞாபகத்தில் கூட புதுப்பித்துக் கொண்டிருப்பார்களா என்பதும் சந்தேகம் தான்...சில வருடங்கள் வரை நவரச நாயகனாய் ஜொலித்துக் கொண்டிருந்த கார்த்திக் கும் கூட காணாமல் போனவர் தான்! ஆனால் இவரை ரசிகர்கள் மறந்து போகவில்லை. மாறாக, நல்ல நடிகர்...! இப்படி ஓய்ந்து போய்விட்டாரே என்று மாய்ந்து போனவர்களே அதிகம்!
முத்துராமனின் மகன் என்ற முத்திரையோடு நடிகர் அவதாரம் எடுத்தாலும் தனக்கென்று தனி பாணியை, பாதையை வகுத்துக் கொண்டதால் நல்ல கலைஞனாக அடையாளம் காணப்பட்டார் கார்த்திக்.
அவருக்கு என்ன வந்தது? ஏன் நட்சத்திர நாற்காலியை பறி கொடுத்தார்?
அது யாரோட தப்பும் இல்லை. என் தப்புதான். சினிமாவுல பிஸியாக இருந்தாலும் மனசு அலைபாய்ந்து விட்டது. அதனால் என்னை மீறி தவறான சில பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொண்டேன். அந்த பழக்கத்தினால் நிறைய நஷ்டம், இழப்புகள்.
ஒருநாள் உட்கார்ந்து யோசித்தபோது எனக்குள் இருந்த குப்பைகளை அடையாளம் கண்டுகொண்டேன். அது மொத்தத்தையும மூட்டைகட்டி வெளியே வீசி விட்டேன். இப்போது நான் சுத்தமானவன், க்ளீன் ஸ்லேட்! என்று தன் கடந்த சில தவறுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார் கார்த்திக்.
பகிர்ந்து கொள்ள விரும்பாத விஷயம்... பாழாய்ப் போன அந்த பழக்கம் ஏன் ஏற்பட்டது? என்ற கசப்பான காலங்களை! அது நமக்குத் தேவையில்லை.
தொழிலுக்கு தடையாய் இருந்த தீமை குணங்களை தீவைத்துக் கொளுத்தியாயிற்று! வெரிகுட்! வாட் நெக்ஸ்ட் கார்த்திக்?
மறுபடி நடிப்பில் கான்ஸன்ட்ரேட் பண்ணப் போறேன். இப்படி சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க. செய்து காட்டணும்...
சின்ன இடைவெளியிட்டு தொடர்கிறார்...
முதலாம் சந்திப்பில் படம் முக்கால்வாசி முடிஞ்சு அப்படியே கிடந்தது. அந்தப் படத்தை முயற்சி பண்ணி முடிச்சிருக்கேன். மனதில்னு புது டைட்டில் வச்சு... ஏறக்குறைய ஃப்ரஷ் ப்ராஜக்ட் மாதிரி! இப்ப காப்பி ரெடியாக இருக்கு. ரஷ் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நிச்சயமாக எனக்கு பிரேக் தர்ற படமா இருக்கும்.
இப்படி சொல்வது ஒன்றும் புதிய விஷயமில்லை. எல்லாப் படங்களைப் பற்றியும், எல்லா ஹீரோக்களும் ஒப்பிக்கும் டயலாக்தான் இது.
நோ... நோ... இந்தப் படத்தைப் பத்தி நான் சொல்றதை அப்படி ஒரு சம்பிரதாயமான பேச்சா எடுத்துக்க வேணாம். இது உண்மை, ஹீரோவா நாலு பாட்டு, நாலு பைட்டு பண்ணி இருந்தா இப்படி சொல்ல எனக்கே கூச்சமா இருந்திருக்கும்.
மனதில் படத்தில் இன்னொரு அட்டெம்ப்ட் பண்ணி இருக்கேன். வில்லனும் நான்தான். டயலாக் டெலிவரி, மானரிஸம், ஸ்டைல் எல்லாத்தையும் மாத்தி வேறு ஒரு நடிகனாக நானே நடிச்சிருக்கேன். எனக்கே புது அனுபவமா இருந்தது.
என்று கார்த்திக் சொல்வதை நம்பத்தான் முடியவில்லை. ஹீரோவாய் நடிக்கும் போதே கால்ஷீட் டிமிக்கிக் கொடுப்பவர். வில்லனாய் நடிக்க முன் வந்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தான்!
கார்த்திக்கை மாற்றிய மந்திர சக்தி எது?
மெச்சூரிட்டிதான்! ஹீரோன்னா உசத்தி. வில்லன்னா மட்டமா? அப்படி எல்லாம் ஒரு ஸ்கேலும் கிடையாது. ரெண்டுமே நடிப்புதான். இன்னும் சொல்லப் போனா, ஹீரோவுக்காவது லிமிட்டேஷன் இருக்கு. வில்லன் ரோல் அப்படி இல்லை. என்ன வேணாலும் பண்ணலாம். அந்த வசதியை பயன்படுத்திக்க நினைச்சேன். அதனால் தான் வில்லன் ரோல் பண்றீங்களான்னு கேட்டதும் அஞ்சு செகண்ட் மட்டும் யோசிச்சு யெஸ் சொன்னேன்.
மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் வில்லன் வாய்ப்பு வந்தால் ஏற்பாரா?
கண்டிப்பா நடிப்பேன். ஆனால் நான் நடிக்கும் அந்த கேரக்டருக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கணும். அப்படிப்பட்ட கேரக்டரா இருந்து நடிச்சாத்தான் எனக்கும் பெருமை. அந்த கேரக்டருக்கும் பெருமை. அப்படி இல்லாம சாதாரண கேரக்டரா இருந்தா... ஸாரி, சத்தியமா நான் பண்ணமாட்டேன் என்கிற கார்த்திக் ஒரு மாறுதலுக்காக வில்லன் வேடம் ஏற்க முன் வந்தாலும், என்றைக்கும் அவர் ஹீரோதான். இல்லையா... மிஸ்டர் கார்த்திக்?
ஆமாம். அதில என்ன சந்தேகம்? இன்னும் வெளிப்படையாச் சொல்லப் போனா... முன்னைவிட இனிமே பண்ற படங்கள்ல புது கார்த்திக்கைப் பார்க்கலாம். இத்தனை நாள் பார்த்தீங்கன்னா... டான்ஸீம் சரி, ஃபைட்டும் சரி... ஹன்ட்ரட் பர்சென்ட் பக்காவா பண்ணினதில்லை. அந்த இரண்டுமே இயற்கைக்கு மாறான விஷயம் என்பதாலோ என்னவோ முழு ஈடுபாடு வந்ததே இல்லை. இப்ப அதில எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு.
எது டிரெண்டோ எது ஜனங்களுக்குப் புடிக்குதோ அதை செய்யணும். செய்தால்தான் சக்ஸஸ் பண்ண முடியும்னு புரிஞ்சுக்கிட்டிருக்கேன்.
சண்டை, நடனத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டாராம் கார்த்திக்.
நடிப்பிலும் மாற்றமா? அது என்னங்க?
"பொதுவா... என் நடிப்பைக் கவனிச்சா ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. எமோஷனலான சின் என்றால் கூடிய வரை அதை ஒரே ஷாட்டில் பண்ணவே ஆசைப்படுவேன். அப்படி நடிச்ச பல படங்கள் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கு.
ஆனா இன்னைக்கு அந்த ஸ்டைல் வொர்க் அவுட்டாகாது. இப்ப எல்லாமே ஃபாஸ்ட்! இப்ப போய் ஒரே ஷாட்டில் பண்ணினா போரடிக்கும். அதனால் ஜனங்களோட டேஸ்ட்டுக்கு நாம மாறணும். மாறத் தயாராகிட்டேன்.
ரசிகர்களின் ரசனை மாற்றத்தை உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் கார்த்திக், தயாரிப்பாளர்களின் மனதையும் புரிந்து, நடந்து கொண்டால் கார்த்திக்கை எவரால் வெல்ல முடியும்?
POST LINK -http://www.koodal.com/cinema/celebrity_interviews.asp?id=44&celebrity=Karthik
0 comments:
Post a Comment