Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

குஷ்புவைப் பத்திப் பேசினாலே நான் எமோஷன் ஆகிடுவேன். கார்த்திக்

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels: ,
  •  
    குஷ்புவைப் பத்திப் பேசினாலே நான் எமோஷன் ஆகிடுவேன். கார்த்திக்

    கல் 12 மணிக்கு செக்-அவுட். ஆனா, இன்னும் அவர் எழுந்திருக்கவே இல்லை'' என்று வருத்தமாகப் பேசிக்கொண்டார்கள் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள். இடம்: மதுரை ஹெரிட்டேஜ் ஹோட்டல். எழுந்திருக்காத அவர்: அ.இ.நா.ம.க. தலைவர் கார்த்திக். நானும் புகைப்படக் கலைஞர் காளிமுத்துவும் காலை 7 மணியில் இருந்து நாலு டீ குடித்து, இரண்டு முறை பாத்ரூம் போய்விட்டு 'ஙே’ என்று காத்திருந்தோம்.
     12.15 மணி. அறை எண் 2602-ல் இருந்து ரிசப்ஷனுக்கு அழைப்பு வந்தது. ''சார், காபி ஆர்டர் பண்ணியிருக்கார்!'' என்று உற்சாகமாகக் கூவியபடி சுற்றிச் சுற்றி ஓடினார் ஒரு நிர்வாகி. அடுத்த கணமே துடித்தெழுந்து பாதுகாப்புத் தடைகளை மீறி அறைக்குள் அத்துமீறி நுழைந்து கார்த்திக் முன் நின்றோம். தொப்பி இல்லாமல் இருந்த கார்த்திக் என்னைப் பார்த்ததும், ''ஹே... ஆனந்த விகடன். நான் உங்களை வரச் சொல்லியிருந்தேன்ல. கம்... கம்...'' என்று பச்சப் புள்ளபோலச் சிரித்தார். (நம்புங்கள் மக்களே... கார்த்திக் பேட்டி வேண்டும் என்றால் 'கோ’ ஜீவாவை விட உட்டாலக்கடி செய்தால்தான் சாத்தியம்!)
    கேமராவைப் பார்த்ததும், ''போட்டோ எடுக்கப்போறீங்களா? வெயிட் எ மினிட். ஏன்னா, சினிமாவுக்குனு ஒரு யூனிஃபார்ம் இருக்கு'' என்று சிரித்தபடி தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்துகொண்டார் கார்த்திக்.
    ''எப்படி இருக்கீங்க?''
    ''ஐ யம் ஃபைன். (வயிற்றைத் தொட்டுக் காட்டி) வெயிட்தான் கொஞ்சம் குறைக்கணும். அட்லீஸ்ட் 10 கிலோ குறைக்கணும். என் படத்துக்கு உட்கார்ந்தே ஸ்க்ரிப்ட் எழுதுறதால கொஞ்சம் கூடிருச்சி.''
    ''உங்க மகன் கௌதம், மணிரத்னம் படத்தில் நடிக்கிறாரா?''  
    ''ஹய்யோ... (பெரிதாகச் சிரிக்கிறார்) நான் அதைப் பத்தி இப்ப எதுவும் பேச முடியாது. ஷூட்டிங் போயிட்டு இருக்கு. கௌதம் இப்ப பெங்களூருல மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருக்காரு. கோர்ஸ் முடிச்சிருவாருன்னுதான் நினைக்கிறேன் (சிரிக்கிறார்). என் நண்பர் மணிரத்னம் சார்கிட்ட பையனை ஒப்படைச்சிட்டேன். எல்லாத்தையும் அவர் பார்த்துக்கிடுவார்.''
    '' 'அக்னி நட்சத்திரம்’ பட ரீ மேக்கில் உங்க மகனும் பிரபு மகனும் நடிக்கிறதாச் சொன்னாங்களே... உண்மையா?''
    ''அதைப் பத்திப் பேச யாரோ எனக்குப் போன் பண்ணியிருக்காங்க. பட், முதல்ல இருந்தே எனக்கு அதுல ஒரு இது இல்ல. அந்த மாதிரி பண்ணக் கூடாது. ரீ மேக் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். நாம பண்ணியதை, நம்ம பசங்களே பண்றது சரியா இருக்காது. பிரபு புள்ளையும் நம்ம புள்ளைதானே? அவங்களுக்கு இது ரொம்ப எர்லி. இன்னும் மெச்சூரிட்டி வரணும் அவங்களுக்கு. அதுவும் மணி சார் டைரக்ட் பண்ணதை மத்தவங்க திரும்பப் பண்ணக் கூடாது.''
    ''விஜயகாந்தின் தே.மு.தி.க. இன்னைக்குப் பிரதான எதிர்க் கட்சி. சரத்குமாரோட கட்சிக்கு ரெண்டு எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்க. ஆனா, உங்க கட்சி முந்தைய நிலைமையைக் காட்டிலும் ரொம்பப் பின்தங்கி இருக்கே?''
    ''யூ ஸீ... நான் எந்தத் தப்பும் பண்ணலை. ஐ யம் ஸ்ஸ்யூர். அந்தச் சந்தோஷம் எனக்குப் போதும். தப்புப் பண்ணியிருந்தா, நானும் நிறைய விஷயம் சாதிச்சிருக்கலாம். ஆனா, அந்த வெற்றி எனக்கு வேண்டாம். காலையில எந்திருச்சி (12 மணி காலையிலயா?!) கண்ணாடி பார்க்கும்போது, தெளிவாத் தெரியணும். என்னைப் பார்த்து நானே தலை குனியக் கூடாது. ஒரு தடவை நான் ஒரு வார்த்தை சொல்லப் போயி, பெரிய வயலன்ட் ஆகிடுச்சி. என்னைப் பொறுத்தவரைக்கும் பாலிடிக்ஸ் வந்து, நம்ம மனசாட்சிக்கு எது நல்லா, தெளிவாப்படுதோ அதுதான். வேற இல்லை. கட்சியை வளர்க்கிறதுக்காக, ரியல் வாழ்க்கையில எனக்கு நடிக்கத் தெரியாது.''
    ''சரி... உங்க நாடாளும் மக்கள் கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன?''
    ''டிஃப்ரன்ட் பாலிடிக்ஸ் பண்ணணும்னு நினைக்கிறேன். பாலிடிக்ஸ் வந்து சினிமா இல்லை. இது ரியல். ரியல் லைஃபை சினிமா மாதிரி நடத்தணும்னு சிலர் நினைக்கிறாங்க. அதுல எனக்கு லைக் இல்லை. அந்த மைலேஜ் எனக்கும் வேண்டாம். என் பார்ட்டிக்கும் வேண்டாம். தீவிரமா இறங்கி என்னாலயும் அரசியல் பண்ண முடியும். பட்... அதோட விளைவுகளை நம்மாலயே கன்ட்ரோல் பண்ண முடியாது. ஸோ, நெருப்போடு விளையாடக் கூடாது. அது தேவையும் இல்லை. நீங்க எது நடக்கக் கூடாதுனு நினைக்கிறீங்களோ, அதுதான் நடக்கும்!'' (இதுல, தலைவனோட எதிர்காலத் திட்டம் எங்கே வருது? சரி... டிராக் மாறலாம்!)
    ''குஷ்பு இப்பவும் 'கார்த்திக்... கார்த்திக்’னு பயங்கரமா ஃபீல் பண்றாங்களே?''
    ''ஷி இஸ் அமேஸிங். குஷ்... ஷி இஸ் த பெஸ்ட். என் ட்ரூ ஃப்ரெண்ட். அவங்களப் பத்திப் பேசினாலே நான் எமோஷன் ஆகிடுவேன். ப்ளீஸ்... இதுக்கு மேல வேணாம்.''
    ''மதுரை ஆதீனம் (பெயரைச் சொன்னதுமே அதிர்ந்து சிரிக்கிறார்) உங்க நண்பர். அவர் நித்தியானந்தாவை ஆதீனமா நியமிச்சதைப் பத்தி உங்ககிட்ட எதுவும் பேசிக்குவாரா?''
    ''சில நேரங்கள்ல நமக்கே சிலர் சர்ப்ரைஸ் கொடுப்பாங்க. இது ஆதீனம் கொடுத்த சர்ப்ரைஸ். (சின்ன யோசனைக்குப் பிறகு) நித்தியானந்தாவை நியமிச்ச தில் சர்ப்ரைஸ் இல்ல. அதுக்கு அப்புறம் வர்ற செய்திலாம் சர்ப்ரைஸ்!''
    ''சார்... பேக் டு பாலிடிக்ஸ்... மூன்றாவது முறையாக முதல்வர் ஆகியிருக்கும் ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கு?''
    ''ஷி இஸ் ஏ டைமண்ட் லேடி. ஐ ரியலி அட்மைர். ராதாரவி சைதாப்பேட் எம்.எல்.ஏ. ஆனப்பவே, 'எ டைமண்ட் லேடி’னு அவங்களை நான் சொல்லியிருக்கேன். அப்ப நான் பாலிடிக்ஸ் லயே கிடையாது. ஷி இஸ் வெரி ப்ரில்லியன்ட் லேடி. பட், அந்த பிரில்லியன்ட் எல்லாருக்கும் இருக்கான்னு எனக்குத் தெரியாது.''
    ''அழகிரி - ஸ்டாலின் ரெண்டு பேர்ல, தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு யார் தகுதியானவர்?''
    (சின்னதாக அதிர்ச்சியாகிறார்...) ''இதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க? எனக்கு ரெண்டு பேருமே ஓரளவுதான் பழக்கம். ஆனா, நமக்கு வேண்டியவங்க ரொம்பப் பேர் அவங்களோட நெருக்கமா இருக்காங்க. வெல்... நம்ம திராவிட இயக்கங்கள்ல தி.மு.க. ஒரு ஓல்டஸ்ட் பார்ட்டி. அந்த பார்ட்டிக்கு எது நல்லதுனு நிச்சயமா அவங்களுக்கே தெரியும். நாம சொல்லணும்னு அவசியம் இல்லை.''
    ''மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர்னு 'டைம்ஸ்’ வரை திட்டுறாங்க. நீங்க என்ன சொல்றீங்க?''
    (பலமாகச் சிரித்தபடி...) ''மன்மோன் சிங் சார் மேல நான் நெறைய மரியாதை வெச்சிருக்கேன். அவர் ஹார்ட் பேஷன்ட். இண்டிபெண்டன்ஸ் டே ஸ்பீச்சுல ஜெய்ஹிந்தைக்கூட அவரால உணர்ச்சிபூர்வமாகச் சொல்ல முடியலை. (முஷ்டியை உயர்த்தி அதேபோல் செய்து காட்டுகிறார்). அண்ணா ஹஜாரேகூட அவரைவிட ஜாஸ்தி சொல்றாரு. ஏன்னா... பிரதமரோட உடம்புல அவ்வளவு பலவீனம் இருக்கு. உடம்புல பிரச்னையிருந்தும் அவர் இவ்ளோ பெரிய சுமையைத் தாங்கிட்டு இருக்காரு. நான் என்ன யோசிக்கிறேன்னா, சுய லாபத்தை மீறி இருக்கணும் பாலிடிக்ஸ். இந்தியாவின் நலனுக்கு மீறி சுயநல பாலிடிக்ஸ் இருக்கக் கூடாது. ஒரு சின்ன எஸ்.எம்.எஸ். பல்க்கா போறதால நார்த்ஈஸ்ட் மக்களுக்கு எவ்வளவு பிரச்னை ஆகியிருக்கு பாருங்க!''
    ''இவ்ளோ விஷயம் கவனிக்கிறீங்களா... ஆச்சர்யமா இருக்கு...''
    ''என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... நான் தினமும் எத்தனை நியூஸ் பேப்பர் படிக்கிறேன் தெரியுமா? என் ஃபேஸ்புக் பேஜ்ல முன்னாடிலாம் டெய்லி ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருப்பேன். ஆனா, இப்ப முடியலை. பாலிடிக்ஸ் நீங்க எதிர்பார்க்காத சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளும். அது விஸ்வ ரூபம் எடுத்து வரும்போது, நீங்க ஒரு கோட்டைத் தாண்டிப் போக வேண்டிய கட்டாயம் வரும். அந்தக் கட்டாயம் எனக்கும் வரலாம். ஆனா, இப்பவரைக்கும் அதை கிளவரா மேனேஜ் பண்ணி இருக்கேன். பட், என்னைக்கும் அந்தக் கோட்டைத் தாண்டி நான் போக மாட்டேன்!'' என்ற கார்த்திக் எழுந்து வந்து கை குலுக்கி, என் கன்னத்தைக் கிள்ளி, முதுகில் தட்டிக்கொடுத்து விடை கொடுத்த கணம் நெகிழ்ந்துவிட்டேன்.
    அரசியல்வாதியாக எப்படியோ... ஆனால், கார்த்திக் ஒரு நல்ல ஆத்மா!

    Related Posts :



    0 comments:

    Post a Comment