Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

எனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்


தெய்வ திருமகன் பட விமர்சனங்களை படிச்சி படிச்சி ரெண்டு மூணு நாளா காண்டாகி கெடக்கேன் .. விக்ரம் அப்டி நடிச்சிருக்கார் , விக்ரம் இப்டி நடிச்சிருக்கார்னு ஆளாளுக்கு அள்ளி வீட்டுக்கிட்டு இருக்கிறத பாக்கிறப்ப சிரிக்கிறதா அழுவுரதான்னு தெரியலை .... இதை எல்லாம் படிக்கிறப்ப எனக்கு சில விஷயங்கள் புரிபடவே மாட்டேங்கிது .... இப்படி அசாதாரமான கதாபாத்திரம் ஒன்றில் உடலை வருத்தி கஷ்டபட்டு நடிப்பவனை மட்டும்தான் சிறந்த நடிகன் என்று நம் சமூகம் ஏற்று கொள்ளுமா? உங்களை போல என்னை போல ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியவர்கள் எல்லாம் நடிகர்கள் கிடையாதா? இப்படி ஒரு கேள்வி என் மனதில் தோன்றியவுடன் அதற்க்கு விடையாக என் மனதில் எழுந்தவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் ... இன்று கமலையோ வேறு சில நடிகர்களையோ சிலாகித்து பேசும் நாம், மறந்து போன ஒரு அற்புதம் அவர் ... அவரை பற்றி என்னுடைய பார்வையே இந்த பதிவு ...


தமிழ் சினிமாவுக்கு இருக்கும் பெரிய சாபமே நடிக்க தெரியாத நடிகர்களின் கையில் எப்பொழுதும் அது மாட்டி கொண்டு அல்லாடுவதே .... நடிப்பு என்பது என்னை பொருத்தவரைக்கும் நான் நடிக்கிறேன் என்பதை பார்பவர்களுக்கு புரியவைக்க வேண்டி கஷ்டபட்டு நடிப்பதோ , இல்லை வித விதமான கெட்டப்புகளில் ஸ்கிரீனில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசமான குரலில் பேசி நடிப்பதோ , இல்லை தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு நடை உடை பேச்சு தோற்றம் என்று அனைத்தையும் தழைகீழாய் மாற்றி தேசிய விருதை குறிவைப்பதோ இல்லை .... இயல்பாய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் வாழ்ந்து காட்டுவதே ... அப்படி இயல்பான நடிப்பை வெளிபடுத்தும் திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு ... எனக்கு தெரிந்து பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் நாடக தன்மை சிறிதும் இல்லாமல் இயல்பாய் நடித்த ஒரே நடிகன் பாலையா மட்டுமே ... ஒரு சில எம்ஜிஆர் படங்களை தவிர்த்து பார்த்தால் நாகேஷ் அவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம் .... அதன் பின்னால் அந்த லிஸ்டில் பெரிய தேக்கம் இருந்து வந்தது நீண்ட நாட்களுக்கு... இரண்டு நடிகர்கள் நுழையும் வரை .. ஒருவர் ரகுவரன் , இன்னொருவர் கார்த்திக் ....
சினிமாவில் நுழைய மிக எளிதான வழி நடிகரின் மகனாக இருப்பதே ... கார்த்திக் அவர்களும் சினிமாவில் அப்படிதான் நுழைந்தார் , அவர் தந்தை முத்துராமன் மூலமாய் ... முதல் படமே மிக பெரிய வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை... தான் முதல் படத்திலேயே யார் இந்த பையன் என்று அனைவரையும் கவனிக்க வைத்திருப்பார் ... அதுவும் அம்மா சென்டிமெண்ட் , காதல் காட்சிகள் , வில்லனிடம் அவமானப்படும் காட்சிகள் என்று எல்லா வகையான காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்பு இருக்கும் ... இன்றும் அந்த படத்தை எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் எனக்கு இது ஆச்சர்யமாக தெரியும்.... எனக்கு பதினாறு வயதினிலே கமலை விட (கவனிக்க கமல் ஒரு சிறந்த நடிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை) அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் சிறந்த நடிகனாக தெரிய காரணம் அந்த இயல்பான நடிப்பே ...

அதன் பின்னர் அவருக்கு சில வருடங்களுக்கு சொல்லி கொள்ளும்படியான படம் இல்லை ... அவருக்கு அடுத்து பெரிய பிரேக் கொடுத்த படம் நினைவெல்லாம் நித்யா... அந்த படங்களின் பாடல்கள் எல்லாமும் பெரிய ஹிட் குறிப்பாக பணி விழும் மலர்வணம் என்ற பாடல் இப்பொழுது கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல் ... இந்த படத்தின் மூலமாய் கார்த்திக் காதல் இளவரசனாக புது பரிமாணம் பெற்றார் ... 85-90 காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் காதல் படங்களே .. கோபுர வாசலிலே , மௌன ராகம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய பேரை பெற்று கொடுத்தன ... இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு கார்த்திக் கண்ணுக்கு தெரிவதில்லை , காதல் வயபட்ட இளைஞன் ஒருவனே தெரிவான் ... ஒரே ஒரு காட்சி கோபுர வாசலிலே படத்தில் பானுபிரியா கார்திக்குக்கு கேசட் அனுப்பி வைப்பார் ... அதை கார்த்திக் போட்டு கேட்கும் காட்சியில் அவர் காட்டும் முகபாவங்கள் no chance அது அவரால் மட்டுமே முடியும் .... பரபரப்பு ,சந்தோஷம் , குழப்பம் , அமைதி என்று பல உணர்ச்சிகளை ஒரு சேர வெளிபடுத்தி இருப்பார் இயல்பாய் ...
மௌனராகம் படத்தில் அவர் இருபது நிமிடங்கள் மட்டுமே வருவார் .. ஆனால் படம் பார்த்து முடிக்கும் பொழுது நம் மனசு முழுவதும் அவர்தான் இருப்பார் ... சச்சின் என்று ஒரு படம் , விஜய் நடித்திருப்பார் .... அந்த படத்திர்க்கு ஆனந்த விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதி இருந்தார்கள் ... மௌன ராகம் கார்த்திக் போல நடிக்க விஜய் முயற்சி செய்திருக்கிறார்.... திரையில் அதை பார்க்கும் பொழுது விஜய் இனிமேல் இப்படி முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது என்று .... எனக்கும் சச்சின் படம் பார்க்கும் பொழுது கார்த்திக் ஞாபகம்தான் வந்தது ... அந்த மாதிரியான வேடங்களில் வெளுத்து கட்டுவார் கார்த்திக் .... அவரின் குறும்பான நடிப்பு வேறு யாருக்கும் கண்டிப்பாக கிடையாது .... விஜய் பல முறை அப்படி நடிக்க முயன்று தோற்று இருக்கிறார்... காரணம் மற்றவர்கள் குரும்பை வலிந்து முகத்தில் வெளிபடுத்துவார்கள் ,, ஆனால் கார்த்திக் முகத்தில் இயல்பாகவே அது வெளிப்படும்....
அடுத்து தமிழ் சினிமா கிராமத்து கதைகள் பக்கம் தன் பார்வையை திருப்பியது .... நிறைய படங்கள் கிராமத்து கதையில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்று எல்லாரும் கிராமத்து கதையாக எடுத்து கொண்டிருந்த நேரம். கார்த்திக் நடித்து வெளிவந்த கிராமத்து படம்தான் கிழக்கு வாசல் .... எனக்கு தெரிந்து கிராமத்து கதையில் ஹீரோ பேண்ட் போட்டு நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன் ... கிராமத்து கதாநாயகன் என்றாலே வேட்டி அல்லது பட்டாபட்டி , இரண்டில் ஒன்றைதான் ஹீரோ கட்டி இருப்பார் .... அப்படி நடித்தால்தான் ரசிகன் மனதில் அந்த ஹீரோ கிராமத்தானாக எளிதில் பதிவான் ... அப்படி இல்லாமல் பேண்ட் போட்டு நடித்தும் ஒரு கிராமத்து அப்பாவியாக பார்க்கும் ரசிகனின் மனதில் பதிவது என்பது அந்த காலகட்டத்தை பொறுத்த வரை கொஞ்சம் கஷ்டமான காரியம் ... ஆனால் கார்த்திக் அவரின் இயல்பான நடிப்பினால் அதை வெற்றிகரமாக செய்திருப்பார் ... அதன் பிறகு அவர் நடித்த பொண்ணுமணி , நாடோடி தென்றல் , பெரிய வீட்டு பண்ணைக்காரன் என்று நிறைய படங்களில் கிராமத்து இளைங்கனாக நடித்திருப்பார் குறையே சொல்ல முடியாதபடி ...

கார்திக்கிடம் இருக்கும் இன்னொரு பெரிய திறமை , அவரின் இயல்பான நகைசுவைதான் .... இது எல்லா கதாநாயகர்களுக்கும் அமைந்துவிடாது .... எனக்கு தெரிந்து நகைசுவையில் கலக்கிய கதாநாயகர்கள் என்று பார்த்தால் கமல், ரஜினி தவிர்த்து கார்திக்கும் ஒருவர் ... கவுண்டமணி கூட நடிக்கும் பொழுது மட்டும் சத்தியராஜ் மிண்ணுவார் .. ஆனால் கார்த்திக் யாருடன் நடிக்கும் பொழுதும் காமெடியில் கலக்குவார் ... அந்த வகையில் கார்த்திக் தன் முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்த படம் உள்ளத்தை அள்ளித்தா ... அவரின் குறும்புதனமும் , நகைசுவையும் படம் முழுவதும் வெளிபட்டிருக்கும் .... அதே வருடத்தில் இதற்க்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு படம் நடித்திருப்பார் .. அது கோகுலத்தில் சீதை .... அந்த ரிஷி கதாபாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் கண்டிப்பாக இவ்வளவு யதார்த்தமாக செய்து இருக்க முடியாது ... இப்படி ஒரே வருடத்தில் இரண்டு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கதாபாத்திரங்களை அதிலும் இவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று அனைவரும் பாராட்டும் வகையில் நடிக்க இவரை விட்டால் தமிழ் சினிமாவில் வேறு ஆளே கிடையாது .... நவராசநாயகன் என்று தனக்கு தானே படம் கொடுத்து கொண்டாலும் , அந்த பட்டத்திர்க்கு முற்றிலும் தகுதியானவர் அவர் ...

ஆரண்யகாண்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும் என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில் மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில் அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம் கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும் செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ... இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால் கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ...
இந்த 75 வருட தமிழ் சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில் தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...

POST Link -- http://apkraja.blogspot.com/2011/07/blog-post_18.html

Related Posts :



0 comments:

Post a Comment