மாஞ்சா வேலு
டிவி செய்தி சேகரிப்பவர் விஜயகுமார். அவரது மூத்தமகன் கார்த்திக் அசிஸ்டென்ட் கமிஷனர். திருச்சியிக்கு மாற்றலாகி வந்ததும் அதிரடியாக களத்தில் இறங்கி அங்கு நடக்கும் ரியல் எஸ்டேட் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்.
ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறப்பதோடு, தனக்கு கட்டுபடாதவர்களை இறக்கமின்றி கொலை செய்து வஞ்சம் தீர்ப்பவர் தாதா சந்திரசேகர். அப்படிப்பட்ட கொடூர வில்லனை கைது செய்து திருச்சியை காப்பாற்ற வேண்டிய பெரிய வேலை கார்த்திக் பதவிக்கு இருக்க, அவரை நெருங்க முயல்கிறார். அப்போதுதான் தெரிகிறது அவருக்கு பணபலம் மட்டுமல்ல, மந்திரி செல்வாக்கு உயர் போலீஸ் அதிகாரி செல்வாக்கு இருக்கிறது என்பது. இதனால் சந்திரசேகரின் அடிவருடிகளை களையெடுக்க ஆரம்பிக்கிறார் கார்த்திக்.
இதில் கோபமான சந்திரசேகர், உயர் போலீஸ் அதிகாரி உதவியோடு கார்த்திக்கை கத்தியால் குத்தி, அவரது உடலை எடுத்துச்சென்று எரிக்க முயற்சிக்கிறார். பைனான்ஸ் கம்பெனி மேனஜரை கொலை செய்து அந்த பணத்தோடு கார்த்திக் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தியை பரப்பி, மக்களை நம்ப வைக்கிறார்.
விஜயகுமாரின் இன்னொரு மகனும், கார்த்திக்கின் தம்பியுமான அருண் விஜய், அடிபட்டு தீயில் கிடந்த அண்ணன் உடலை காப்பாற்றி, முறைப்படி அவருக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு, அண்ணன் கொலைக்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பது மீதி படம்.

ஹீரோவாகவே நடிக்கலாம். பிரமிக்க வைத்திருக்கிறார் கார்த்திக். ஒருகாட்சியில் சந்தானம் சொல்கிறார். 'வாயில கொஞ்சம் தண்ணிய ஊத்திட்டு பேசு. உங்கண்ணன் குரலு வரும்' என்று. நியாயம்தான். தண்ணீரை போலவே நீக்கமற நிறைந்துவிட்டார் அந்த ஏசிபி பாத்திரத்தில்!
அருண் விஜய் ஆரம்ப காட்சியிலேயே ஆங்கில படம் பார்ப்பதை போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறார். கட்டிடத்தில் இருந்து குதிப்பது, கட்டிடத்தில் சரசரசவென மேலே ஏறுவது, ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடம் பறந்து பாய்ந்து தாவுவது என அடேங்கப்பா என வியக்கவைக்கிறார். காதலியுடன் கொஞ்சும் போதும், குடும்பத்தில் பாசம் காட்டும் போதும் என ஜாலியாக இருப்பவர், அண்ணன் இறந்ததும் துக்கம் தாளாமல் கத்தி அழும் போதும், குழந்தை பிறந்த செய்தியை கேட்டு வெம்பி வெடிக்கும் போதும் செண்டிமெண்ட் ஏரியாவில் கலக்கியிருக்கிறார்.

காதல் காட்சியிலும் பாடல் காட்சியிலும் அறிமுக நாயகி தன்ஷிகா நிறைவாக செய்திருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் பெரிய ரவுண்ட் வருவார்.
தன்னை எதிர்ப்வர்களை அழித்து விடும் உமாபதி கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் களம் இறங்கி தன் நடிப்பு திறமைக்கு தீனி போட்டிருக்கிறார் சந்திரசேகர். அருண்விஜய் தன்னை அடித்ததை நினைத்து கூனிகுறுகி உட்கார்ந்திருக்கும் காட்சியில் அற்புதமான வெளிப்பாடு. தன்னுடைய தலைமுடியை ஒரு விரலால் ஆட்டி ஒரு கேரக்டர் ஸ்டைலையும் மெயின்ட் செய்வது ரசிக்கும்படியாக இருக்கிறது.
சந்தானம், கஞ்சாகருப்பு, லொள்ளு மனோகர், சிங்கமுத்து, ஷகீலா, இவர்கள் எல்லாரும் இணைந்து நம்மை சிரிக்க வைக்கின்றனர். நாடோடிகள் சம்போ சிவ சம்போ பாடலை வைத்து அவர்கள் செய்யும் காமெடியில் தியேட்டர் சிரிப்பு மழையில் அதிர்கிறது. நகைச்சுவை ஏரியாவில் திறமை தெரிவது லொள்ளு மனோகரிடம்.
நண்பனாக இருந்து வில்லனாக துரோகம் செய்யும் கதாபாத்திரத்த்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஹேமந்த், புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்து சபாஷ் வாங்குகிறார். குறும்புத்தனமான அப்பாவாக விஜயகுமார், போலீஸ்காரரின் மனைவியாக அனுஹாசன்,அம்மாவாக மீரா கிருஷ்ணன், மச்சானாக வாசு விக்ரம் என்று இன்னும் நிறைய பேர் படத்தில் இருக்கின்றனர்.
மணிசர்மா இசையமைப்பில் வாலியின் பாடல் வரிகள் ரசிகர்களின் மனதை தொடுகிறது. அதற்கு நல்ல ஆட்டமும் போட்டிருக்கிறார்கள். படத்துக்கு வந்தால் பொழுது போக்கு உத்திரவாதம் என்று சொல்லுகிற அளவுக்கு ஒரு அதிரடியான ஜாலியன ஆக்ஷன் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
0 comments:
Post a Comment